என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, February 26, 2012

ஹிக்கின்பாதம்ஸ்

சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல, நாம் நுழைய முடியாத பல இடங்களுக்கு அது நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட மந்திரக் கம்பளங்கள் மலை போல் குவிந்திருக்கும் இடம்தான் புத்தகக் கடைகள்.

இன்று சென்னையில் நிறைய புத்தகக் கடைகள் வந்துவிட்டன. உலகின் மிக முக்கியமான புத்தகங்கள் அனைத்தையும் இங்கு காண முடிகிறது. புதிய புத்தகங்கள் உலகின் எந்த மூலையில் பதிப்பிக்கப்பட்டாலும் உடனே சென்னையிலும் அதன் பிரதிகள் கிடைக்கின்றன. ஆனால் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இதெல்லாம் சாத்தியமா?

முயன்று பார்த்து வெற்றியும் கண்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம். ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் என்ற அந்த மனிதர் இங்கிலாந்தில் இருந்து மெட்ராசிற்கு வந்த ஒரு கப்பலில் டிக்கெட் வாங்காமல் வந்தவர் என்று கூறப்படுகிறது. இப்படி டிக்கெட் வாங்கக் கூட காசு இல்லாமல் மெட்ராஸ் வந்த ஹிக்கின்பாதம்ஸ்தான், இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிகப் பழைய புத்தகக் கடையை நிறுவியவர்.

ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசில் பார்த்த முதல் வேலை, இங்கிருக்கும் ராணுவ வீரர்களுக்கு பைபிள் விற்பனை செய்வது. அடுத்ததாக இங்கிருந்த வெஸ்லியன் புத்தகக் கடையில் அவருக்கு நூலகர் வேலை கிடைத்தது. புத்தகப் பிரியரான அவருக்கு இந்த வேலை, கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல இருந்தது. ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை. கடுமையான நஷ்டம் காரணமாக கடையை மூடி விட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் ஹிக்கின்பாதம்ஸிற்கு இதனை விட்டுவிட மனமில்லை. எனவே மிகக் குறைந்த விலைக்கு இந்த கடையை அவரே வாங்கிவிட்டார்.

1844ஆம் ஆண்டு அப்படி உதயமானதுதான் 'ஹிக்கின்பாதம்ஸ்' புத்தகக் கடை. ஆரம்ப நாட்களில் பணியாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு வசதி இல்லை. எனவே அவரே இங்கும் அங்கும் ஓடி வாடிக்கையாளர்களுக்கு புத்தகங்களை எடுத்துக் காட்டுவார். அவருடைய நினைவாற்றல் அபாரமானது. எந்த புத்தகம் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக சொல்லுவார். இது புத்தகப் பிரியர்களை இந்த கடையை நோக்கி இழுத்தது. வெல்லக் கட்டியை நோக்கி படையெடுக்கும் எறும்புகள் போல, ஹிக்கின்பாதம்ஸில் மொய்த்தார்கள் மெட்ராஸ் வாசகர்கள். மெல்ல மெல்ல இந்த கடையை மெட்ராசின் ஒரு அறிவார்ந்த அடையாளமாக மாற்றினார் ஹிக்கின்பாதம்ஸ்.

ஜான் முர்ரே என்பவர் 1859ஆம் ஆண்டு எழுதிய Guidebook to the Presidencies of Madras and Bombay என்ற புத்தகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசின் பெருமைக்குரிய ஒரு புத்தகக் கடை என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான டிரெவெல்யான் பிரபு (Lord Trevelyan) மெக்காலே பிரபுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், மெட்ராஸ் நகரின் அழகான அம்சங்களில் தனது மனதிற்கு பிடித்த ஹிக்கின்பாதம்சும் ஒன்று என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சாக்ரடீஸ், பிளாட்டோ முதல் விக்டர் ஹூகோ வரை அனைவரையும் ஹிக்கின்பாதம்சில் சந்திக்க முடியும் என்றும் புகழ்ந்திருக்கிறார்.

1858ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இந்தியாவின் அரசாட்சி இங்கிலாந்து அரசியிடம் கை மாறிய போது, அதனைத் தெரிவிக்கும் பிரசுரங்களை ஹிக்கின்பாதம்ஸ்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சிட்டு மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் விநியோகித்தது. 1875இல் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தபோது, அவரின் அதிகாரப்பூர்வ புத்தக விற்பனையாளராக ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ் நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இதனையடுத்து அரசிற்கு தேவையான புத்தகங்களை விற்பனை செய்யும் மிகப் பெரிய வாய்ப்பு ஹிக்கின்பாதம்சிற்கு கிடைத்தது.

இதனிடையே ஹிக்கின்பாதம்ஸ் புத்தகங்களை சொந்தமாக வெளியிடவும் தொடங்கியது. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லி முதல் மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ்ய உடையார் வரை பல பிரபலங்கள் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். பேரறிஞர் அண்ணா ஹிக்கின்பாதம்சிற்கு வரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கிவிடுவாராம். ஒருமுறை ஹிக்கின்பாதம்ஸ் நடத்திய கணக்கெடுப்பின்படி, அதிக புத்தகங்களை வாங்கியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்கள் மைசூர் மகாராஜாவும், பேரறிஞர் அண்ணாவும் தான்.

ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ், 1888 மற்றும் 1889 ஆகிய ஆண்டுகளில் மெட்ராசின் ஷெரீப் என்ற கவுரவத்தையும் பெற்றார். 1891இல் அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் சி.எச். ஹிக்கின்பாதம்ஸ் கடையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார். அவரது நிர்வாகத்தில் ஹிக்கின்பாதம்ஸ் மெட்ராசிற்கு வெளியிலும் விரிவடைந்தது. ரயில் நிலையங்களில் ஹிக்கின்பாதம்ஸ் கடைகள் முளைத்தன.

1904இல் தான் ஹிக்கின்பாதம்ஸ் இன்று இருக்கும் கலைநயமிக்க கட்டடத்திற்கு மாறியது. நல்ல காற்றோட்டம், உயரமான மேல்தளம் என புத்தகங்கள் பூஞ்சை பிடிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை அலங்கரிக்கும் வண்ணமயமான கண்ணாடிகள் ஐரோப்பாவில் இருந்த வரவழைக்கப்பட்டன, தளத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கற்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

1921ஆம் ஆண்டு ஹிக்கின்பாதம்சை, அசோசியேட்டட் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் 1945ஆம் ஆண்டு அமால்கமேஷன் குழுமத்தின் எஸ். அனந்தராமகிருஷ்ணன் இதனை விலைக்கு வாங்கினார். இன்று ஹிக்கின்பாதம்ஸிற்கு தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் நிறைய கிளைகள் இருக்கின்றன.

நிர்வாகம் மாறிவிட்டாலும், இவை அனைத்திற்கும் விதை போட்டவர் இங்கிலாந்தில் இருந்து ஒன்றும் இல்லாமல் வந்து தனது கடின உழைப்பால் உயர்ந்த ஏ.ஜே. ஹிக்கின்பாதம்ஸ். அந்த மனிதரை நினைவூட்டியபடி இன்றும் மவுண்ட் ரோட்டில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது இந்தியாவின் பழமையான புத்தகக் கடையான ஹிக்கின்பாதம்ஸ்.

நன்றி - தினத்தந்தி

* ஹிக்கின்பாதம்ஸ் முதல் புத்தக்கத்தை 1884ஆம் ஆண்டு வெளியிட்டது. புத்தகத்தின் பெயர் - ‘Sweet Dishes: A little Treatise on Confectionary'

* 1989ஆம் ஆண்டு சில சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கட்டடத்தின் பழமையான தோற்றத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

* மவுண்ட் ரோட்டில் இருக்கும் இந்த இடத்திற்கு பல கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுக்க பலர் முன்வந்தும், பழமையான இந்த கட்டடத்தை விட்டுக் கொடுக்க இதன் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.

2 comments:

  1. நல்ல தொகுப்பு , ஆனால் கடையின் படத்தை போடாமல் விட்டு விட்டீர்கள்.

    ReplyDelete
  2. ஆனால், இன்று, நாம் தேடிச் செல்லும் புத்தகங்கள் அனைத்தும் கிட்டும் என்று சொவதற்கில்லை. எடுதுக்காட்டாக, உலகப் புகழ் பெற்ற ஜோர்ஜ் லூயி போர்ஹே புத்தகங்கள் அங்கே இல்லை.

    ReplyDelete