என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, April 1, 2012

பி ஆர் அண்ட் சன்ஸ்

1843இல் மெட்ராஸ் வந்த ஸ்காட்லாந்து சகோதரர்களோடு தொடங்குகிறது பி ஆர் அண்ட் சன்ஸ் (P.Orr & Sons) நிறுவனத்தின் கதை. சில நிமிடங்களில் கரைந்து மறைந்துவிடக் கூடிய ஐஸ் வியாபாரத்தில் ஆரம்பித்த அவர்களுக்கு, காலத்தால் கரைக்க முடியாதபடி மெட்ராஸ்வாசிகளின் நினைவுகளில் என்றுமே பெண்டுலம் ஆடப் போகிறோம் என்பது அப்போது தெரியாது.

சகோதரர்கள் பீட்டர் ஆரும் (Peter Orr) அலெக்சாண்டர் ஆரும் (Alexander Orr) நரைக்கத் தொடங்கிய நாற்பதுகளில் மெட்ராஸ் வந்தனர். மூத்தவர் பீட்டர் ஆர், கடிகாரம் தயாரிப்பதில் வல்லவர், இளையவர் அலெக்சாண்டர் ஆர் ஒரு வழக்கறிஞர். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பத்தில் மெட்ராசில் 4 அணாக்களுக்கு ஒரு பவுண்ட் ஐஸ் விற்றார்கள். பின்னர் இங்கிருந்த ஜியார்ஜ் கார்டன் அண்ட் கோ (George Gordon & Co) என்ற கடிகார நிறுவனத்தில் சேர்ந்தனர்.

நிறுவனரான கார்டன் 1849இல் ஓய்வு பெற முடிவு எடுத்தபோது, அவரிடம் இருந்து இந்த நிறுவனத்தை வாங்கிக் கொண்டனர். பின்னர் கடிகார விற்பனையில் முன்னணி நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்காக சகோதரர்கள் இருவரும் கடுமையாக உழைத்தனர். புத்திசாலி பொறியாளரான பீட்டர் ஆர், கடிகாரத் தயாரிப்பு மட்டுமின்றி, வேறு சில விஷயங்களிலும் தமது திறனை காட்டத் தொடங்கினார். அப்படி அவர் உருவாக்கியதுதான், நீராவியில் இயங்கும் சாமரம் வீசும் இயந்திரம்.

மூத்தவர் பீட்டர் ஆரின் மகன்களான ஜேம்சும், ராபர்ட்டும் கடிகாரத் தயாரிப்பில் சுவிட்சர்லாந்தில் பயிற்சி பெற்று திரும்பியதும், 1850களில் இந்நிறுவனத்தில் சேர்ந்தனர். 1863இல் இதன் பங்குதாரர்களாகவும் உயர்ந்தனர். இப்படித்தான் பி ஆர் அண்ட் சன்ஸ் என்ற பெயர் வந்தது. 1866இல் பீட்டர் இங்கிலாந்து திரும்பிவிட, 1869இல் ஜேம்ஸ் இறந்துவிட, நிறுவனம் மொத்தமாக ராபர்ட்டின் வசம் வந்தது. ராபர்ட் பி ஆர் அண்ட் சன்ஸ் பெயரை இந்தியாவில் பிரபலப்படுத்தியதோடு அல்லாமல் கடல் கடந்தும் புகழைப் பரப்பினார்.

இந்நிலையில் 1879இல்தான் பிராட்வேயில் இருந்த நிறுவனம் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக மவுண்ட் ரோட்டில் ஒரு அழகிய கட்டடம் கட்டும் பணி அப்போதைய மெட்ராஸ் அரசின் மூத்த கட்டட ஆலோசகரான ராபர்ட் சிஸ்ஹோமிடம் (Robert Chisholm) ஒப்படைக்கப்பட்டது. பிரசிடென்சி கல்லூரி, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் செனட் இல்லம் போன்ற பல கட்டடங்கள் இவரது கை வண்ணத்தில் உருவானவைதான்.

இந்தோ-சராசனிக் பாணியில் கைதேர்ந்த ராபர்ட் சிஸ்ஹோம், அதனுடன் கால் கிலோ கேரள பாணியையும் சேர்த்து கூரைத் தொப்பி எல்லாம் போட்டு, பி ஆர் அண்ட் சன்ஸுக்காக ஒரு அருமையான கட்டடத்தை கட்டிக் கொடுத்தார். உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளத்திற்கு பிரம்மாண்டமான ஷோ ரூம், மேலே கண்ணைக் கவரும் சர விளக்குகளுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றது. பின் பகுதியில், கடிகாரங்களை பழுது நீக்க ஒரு வொர்க் ஷாப் அமைக்கப்பட்டது. மெட்ராஸ்வாசிகளுக்கு மிகத் துல்லியமான நேரத்தை தெரிவிக்க, கட்டடத்தின் முகப்பு கோபுரத்தில் மூன்று முக கடிகாரம் ஒன்றும் பொருத்தப்பட்டது. இந்த கட்டடத்தில்தான் சுமார் 130 ஆண்டுகளைக் கடந்தும் பி ஆர் அண்ட் சன்ஸ் செயல்பட்டு வருகிறது.

கடிகாரம் மட்டுமின்றி தங்க, வைர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றின் விற்பனையிலும் பி ஆர் அண்ட் சன்ஸ் அந்நாட்களில் கொடி கட்டிப் பறந்தது. இங்கிருந்த வொர்க் ஷாப்பில் மிக நேர்த்தியான தங்க, வைர நகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்பட்டன. 1880களில் இந்நிறுவனத்தின் வைரத்திற்கு இந்தியா முழுவதும் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஐதராபாத் நிஜாம் முதல் வேல்ஸ் இளவரசர் வரை பலர் இதன் வாடிக்கையாளர்களாக இருந்தனர். ரங்கூன் கிளையில் இருந்து மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு விலை உயர்ந்த கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போதுதான் இது தடைபட்டது.

அதேசமயம் போரையும் இந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. நகைகள் போன்ற விஷயங்களை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் போர்க் காலத்தில் தேவையான ஏரோப்ளேன் மீட்டர் போன்ற உபகரணங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியது. போரில் சேதமான ஆயுதங்களை பழுது நீக்கித் தரும் பணியும் பின்னால் இருந்த வொர்க் ஷாப்பில் மும்முரமாக நடைபெற்றது. போருக்கு முன்பு நகைகள் மட்டுமின்றி, சர்வே உபகரணங்கள், துணிவகைகள், சமையல் பாத்திரங்கள், பேனா, சைக்கிள், கார் என பலதரப்பு பொருட்களும் இங்கு கிடைத்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இதில் ஒவ்வொரு பொருளாக மெல்ல விடை பெறத் தொடங்கியது.

இதனிடையே இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மாறினார்கள். அனந்தராமகிருஷ்ணனின் அமால்கமேஷன் குழுமத்தின் கைக்குப் போன நிறுவனம், 1967இல் அவரது நண்பர் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் வசம் சென்றது. பின்னர் மெல்ல மெல்ல பி ஆர் அண்ட் சன்ஸ் தனது பழைய கடிகாரத் தொழிலுக்கே திரும்பியது.

ஒரு காலகட்டத்தில் மெட்ராசில் இருந்த பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களை பி ஆர் அண்ட் சன்ஸ் கடிகாரங்களே அலங்கரித்துக் கொண்டிருந்தன. இப்படி வாட்ச் சக்கரங்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த பி ஆர் சகோதரர்கள், காலச் சக்கரத்தால் மறக்கடிக்கப்படாமல் இன்றும் நமது நினைவுகளில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறார்கள்.

நன்றி - தினத்தந்தி

* 1949இல் இதன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட ராஜாஜி, இளைஞர்களின் கைத்திறனை வளர்ப்பதில் இந்நிறுவனம் பெரும் பங்காற்றி வருவதாகப் பாராட்டினார்.

* கனடாவில் உள்ள ராயல் ஒண்டாரியோ அருங்காட்சியகத்தில் பி ஆர் அண்ட் சன்ஸ் தயாரித்த காபி கப் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்நிறுவனத்தின் வொர்க் ஷாப் இடிக்கப்படும் என்ற அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment