என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 7, 2012

ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ்


நிலாவில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங், சூடா ஒரு டீ சாப்பிடலாம் என டீக்கடை தேடினால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருந்தது சுமார் 372 ஆண்டுகளுக்கு முன் மெட்ராசில் கால்பதித்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களின் நிலை. இங்கிருக்கும் இட்லியும், சாம்பாரும் அவர்களுக்கு பிடித்திருந்தாலும், இத்தனை ஆண்டுகளாக சாப்பிட்டுப் பழகிய சாண்ட்விச்சை எப்படி திடீரெனத் துறக்க முடியும்? கனவுகளில் துரத்தும் பீட்சாவுக்கும், பர்கருக்கும் என்ன பதில் சொல்வது?

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அவர்கள் தங்கள் நாட்டு சமையல்காரர்களை அழைத்து வந்து தேவையான உணவுகளை தயாரித்து சாப்பிடத் தொடங்கினர். வசதி படைத்த அதிகாரிகளுக்கு இது சரிப்பட்டு வரும். ஆனால், கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்த அனைவரும் இப்படி சமையல்காரரை அழைத்து வர முடியுமா? திருமணம் ஆகாமலோ, மனைவி உடன் இல்லாமலோ தனியாக வசித்த ஆங்கிலேயர்களின் கதி என்ன? இப்படி ஏங்கித் தவித்த நாக்குகளின், தாகம் தணிக்க வந்தவர்தான் கியாகொமோ திஏஞ்ஜிலிஸ் (Giacomo D'Angelis).

ஹோட்டல் தி' ஏஞ்ஜிலிஸ்

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் மற்றும் சாண்டோஸ் பகுதி இளவரசரான ரிச்சர்ட் பிளான்டாஜிநெட் காம்ப்பெல் (அடப்போங்கப்பா).... (Richard Plantagenet Campbell Temple-Nugent-Brydges-Chandos-Grenville) 1875ஆம் ஆண்டு மெட்ராசின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவ்வளவு நீளமான பெயரை சுமந்து கொண்டு மெட்ராஸ் வந்த ரிச்சர்ட், உஷாராக தனது நட்பு வட்டத்தில் இருந்த கியாகொமோ தி'ஏஞ்ஜிலிஸ் என்ற இத்தாலிக்காரரையும் உடன் வரும்படி அழைப்பு விடுத்தார். காரணம், தி'ஏஞ்ஜிலிஸ் இத்தாலிய மற்றும் பிரெஞ்சு உணவுகளை தயாரிப்பதில் விற்பன்னர். பிரான்சு சென்று இதற்கென பிரத்யேகமாக படித்தவர்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் மெட்ராஸ் வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் இவரின் மேற்பார்வையில்தான் சமையல் அரங்கேறியது. தன்னுடைய வயிற்றுக்காக முன்கூட்டியே யோசித்து தி'ஏஞ்ஜிலிஸை அழைத்து வந்த பக்கிங்ஹாம் இளவரசருக்கு விதி வித்தியாசமான சவாலை முன்வைத்தது.

1876-78 காலகட்டத்தில் மெட்ராஸ் ராஜ்தானி முழுவதும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடியது. சிறந்த நிர்வாகியான பக்கிங்ஹாம் இளவரசர் ரிச்சர்ட், இந்த பஞ்சத்தை திறமையாகவே கையாண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பஞ்ச காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை வேகமாக கொண்டு செல்ல வசதியாக, மரக்காணத்தில் இருந்து காக்கிநாடா வரை கால்வாய் வெட்டினார். சென்னையில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் பிறந்தது இப்படித்தான்.

1880இல் பணி முடிந்து பக்கிங்ஹாம் இளவரசர் இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால் தி'ஏஞ்ஜிலிஸுக்கு மெட்ராசை விட்டுச் செல்ல மனமில்லை. மெட்ராசின் மையப் பகுதியான மவுண்ட் ரோட்டில் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். பின்னர் அதை மெல்ல மெல்ல ஒரு உணவகமாக மாற்றினார். இப்படித்தான்  மவுண்ட் ரோட்டில் இன்று பாட்டா ஷோரூம் இருக்கும் இடத்தில், 1906ஆம் ஆண்டு தி'ஏஞ்ஜிலிஸ் ஹோட்டல் தொடங்கப்பட்டது.

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அருகில் இருப்பதாலும், எதிரிலேயே அரசினர் இல்லம் இருந்ததாலும் தி'ஏஞ்ஜிலிஸ் இந்த இடத்தை தேர்வு செய்தார். அவரது ஹோட்டல் அந்த காலத்தில் மெட்ராசிற்கு வரும் ஆங்கிலேயர்களுக்கு சொர்க்கபுரியாகவே திகழ்ந்தது. வேறெங்கும் கிடைக்காத விதவிதமான மேற்கத்திய உணவுகள், தங்குவதற்கு விசாலமான அறைகள், விளையாடி மகிழ பில்லியர்ட்ஸ் மேஜைகள் என விருந்தினர்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைத்தன. அந்த காலத்திலேயே இந்த ஹோட்டலில் லிப்ட் வசதி இருந்தது. ஒவ்வொரு அறையிலும் மின்விசிறிகள் இருந்தன, மாமிசத்தை பதப்படுத்தி வைக்க குளிர்பதன அறைகள் கூட இங்கிருந்தன.

ஓரே சமயத்தில் 100 பேர் உணவருந்தக் கூடிய வகையில் முதல் தளத்தில் விசாலமான டைனிங் ஹால் இருந்தது. வங்கக் கடல் காற்று வருடிக் கொடுக்க, மாலை வேளையில் மேற்கத்திய இசையை ரசித்தபடியே ஏகாந்தத்தில் மிதக்க வசதியாக, பின்புறம் தோட்டத்தில் மரங்களின் நிழலில் மேஜை போட்டு சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டன. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வாடிக்கையாளர்களை அழைத்து வரவும், மீண்டும் கொண்டு சென்று விடவும் பேருந்து வசதியையும் இந்த ஹோட்டல் வழங்கியது. அதே பேருந்தில் வாடிக்கையாளர்கள் சென்னை நகரையும் சுற்றிப் பார்த்து வரலாம்.

இப்படி வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்ததால், இந்த ஹோட்டலுக்கு அன்றைய ஆங்கிலேய அதிகாரிகள் வட்டத்தில் பலத்த வரவேற்பு இருந்தது. மெட்ராசின் ஆளுநராக யார் வந்தாலும், அரசின் உணவு ஆர்டர்கள் தி'ஏஞ்ஜிலிஸ் வசமே ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் 1934ஆம் ஆண்டு விடுமுறையைக் கழிக்க இத்தாலி சென்றிருந்த, தி'ஏஞ்ஜிலிஸ் அங்கேயே காலமானார். இதனையடுத்து இந்த ஹோட்டல் பொசோட்டோ என்ற இத்தாலியரின் வசம் வந்தது. பின்னர் ஹோட்டல் பொசோட்டோ பிரதர்ஸ் (HOTEL BOSOTTO BROS) என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, பொசோட்டோ தனது தாயகத்திற்கு திரும்பி விட்டதால், 1950ஆம் ஆண்டு முசலப்ப சவுத்ரி என்பவர் ரூ.15,000 கொடுத்து இந்த ஹோட்டலை வாங்கினார். இப்படி அடுத்தடுத்த கைகளுக்கு மாறி, இன்று கால்களை அலங்கரிக்கும் பாட்டா ஷோரூம் ஆகியிருக்கிறது ஹோட்டல் தி'ஏஞ்ஜிலிஸ். மொத்தத்தில் கால ஓட்டத்தில் எத்தனையோ கால்கள் வந்துபோன இந்த இடம், இன்று கால்களுக்காகவே வந்துபோகும் இடமாக மாறி இருக்கிறது.


நன்றி - தினத்தந்தி

* 1884இல் ஊட்டியில் இயங்கி வந்த ஹோட்டல் ஒன்றை (Dawson Ootacamund) விலைக்கு வாங்கி சிறிது காலம் நடத்தி வந்தார் தி'ஏஞ்ஜிலிஸ்.

* தி'ஏஞ்ஜிலிஸ் தான் மெட்ராஸ் வான்வெளியில் முதல் விமானத்தை ஓட்டியவர். இந்த விமானத்தை இவரே வடிவமைத்தார்.

No comments:

Post a Comment