என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 14, 2012

பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம்




ஆடைகள் கிழிந்து அலங்கோலமான நிலையில், கிளைமேக்சில் கதாநாயகனால் காப்பாற்றப்படும் கதாநாயகி போல நின்று கொண்டிருக்கிறது பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம். இப்படி கடைசி நேரத்தில் காக்கப்பட்ட இந்த காப்பீட்டு கட்டடம்தான், மெட்ராஸ் மாநகரின் முதல் உயரமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.

மவுண்ட் ரோடும், ஜெனரல் பேட்டர்ஸ் சாலையும் சந்திக்கும் இடத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த கட்டடத்தின் கதை 1868இல் தொடங்குகிறது. காரணம், அப்போதுதான் இந்த கதையின் நாயகன் ஸ்மித் (W.E. Smith) மெட்ராஸ் வந்தார். மருந்தாளரான ஸ்மித், மெட்ராசில் சில மருந்துக் கடைகளை வைத்து வியாபாரம் செய்துவந்தார். பின்னர் ஊட்டிக்கு இடம் மாறினார். அங்கும் நிறைய மருந்துக் கடைகளைத் தொடங்கினார். மருந்து விற்பனையில் மகத்தான வெற்றி கண்ட ஸ்மித், மீண்டும் மெட்ராஸ் திரும்பினார். ஆனால் இம்முறை ஒரு பிரம்மாண்ட திட்டத்துடன் களமிறங்கினார்.

மவுண்ட் ரோட்டில் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் இருக்கும் இடத்தில் ஸ்மித், ஒரு பெரிய கடையை ஆரம்பித்தார். மருந்து தயாரிப்பு மற்றும் ஒட்டுமொத்த வியாபாரம் செய்யும் இடமாக அது மாறியது. இதுமட்டுமின்றி, அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை, சோடா தயாரிப்பு ஆகியவையும் இங்கு நடைபெற்றன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால் கடையை விரிவுபடுத்த நினைத்தார் ஸ்மித். இதற்காக பெரிய கட்டடம் ஒன்றை கட்ட விரும்பிய அவர், தென்னிந்தியாவின் மிகப்பெரிய மருந்து கம்பெனியின் தலைமைக் கட்டடம் அனைவராலும் பேசப்படும் வகையில் இருக்க வேண்டும் என கனவு கண்டார். அந்த கனவை நனவாக்கும் வேலை 1894இல் தொடங்கியது.

மூன்று வருட கடின உழைப்பில் மெட்ராஸ் மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு அருமையான கட்டடம் உருவானது. 1897ஆம் ஆண்டு அந்த கட்டடம் தொடங்கி வைக்கப்பட்டபோது அதன் பெயர் கார்டில் கட்டடம் (Kardyl Building). மெட்ராஸ் பொதுப்பணித் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஸ்டீபன்ஸ் (J.H. Stephens) என்பவர்தான் இதனை வடிவமைத்தார். அப்போது மெட்ராசில் இந்தோ - சராசனிக் பாணி கட்டடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வந்ததால், அந்த பாணியை அடிப்படையாக வைத்து, அதனுடன் வேறு சில கட்டட பாணிகளையும் கலந்து பிரம்மாண்டமான அரண்மனை போன்ற இந்த கட்டடத்தை வடிவமைத்தார்.

உள்ளே நுழைந்ததும் 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் ஒரு விசாலமான ஷோரூம் இருந்தது. மருத்துவர்களுக்கான அறைகள் முதல் மாடியில் மவுண்ட் ரோட்டைப் பார்த்தவாறு அமைந்திருந்தன. அவர்களின் உதவியாளர்களுக்கான அறைகள், அதே மாடியில் ஜெனரல் பேட்டர்ஸ் சாலையை நோக்கியவாறு இருந்தன. ஒரு காபிக் கடையும், மதுபான விடுதியும் கூட இந்த கட்டடத்தில் இடம்பிடித்திருந்தன. கட்டடத்தின் பின்பகுதியில் சோடா கம்பெனி செயல்பட்டு வந்தது. கட்டடத்தின் உள்பகுதியில் வண்ண வண்ண கண்ணாடிகளுடன் கூடிய போலிக் கூரை (False ceiling) காண்போரை கவர்ந்திழுத்தது. அகலமான மரப் படிக்கட்டுகளும், ஆங்காங்கே அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புச் சட்டங்களும் இந்த கட்டடத்தின் அழகை அதிகரித்தன.

மருந்து விற்பனையில் கோலோச்சி வந்த ஸ்மித்திற்கான போட்டி மவுண்ட் ரோட்டின் எதிர்புறத்தில் இருந்து புறப்பட்டது. சாலையின் எதிர்புறம் அமைந்த ஸ்பென்சர் நிறுவனம் மெல்ல மருந்து விற்பனையில் ஸ்மித்தை முந்தத் தொடங்கியது. இறுதியில் 1925இல் ஸ்மித், தனது வியாபாரம், கட்டடம் என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஸ்பென்சர் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். ஸ்பென்சர் நிறுவனம் அந்த கட்டடத்தின் ஷோரூம் உள்பட பல பகுதிகளை வாடகைக்கு விட்டது.

1934இல் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பென்சர்சிடம் இருந்து இந்த கட்டடத்தை வாங்கியது. லாகூரைச் சேர்ந்த லாலா ஹரிகிஷன்லால் என்பவர்தான் பாரத் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த கட்டடத்தை வாங்கிய இரண்டே ஆண்டுகளில் பாரத் நிறுவனம் ஹரிகிஷனிடம் இருந்து டால்மியாவின் கைக்கு மாறியது. இதனிடையே 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது, நாட்டில் இருந்த பல காப்பீட்டு நிறுவனங்கள் அரசின் எல்ஐசி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பட்டியலில் பாரத் இன்ஷூரன்சும் தப்பவில்லை. இப்படித்தான் எல்ஐசிக்கு சொந்தமானது இந்த கட்டடம்.

இதுநடப்பதற்கு முன்னர் பழைய கட்டடத்தின் முன்பகுதியில் தோட்டம் இருந்த இடத்தில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டது. பைரன், அபோட், டேவிஸ் (Prynne, Abbott and Davis) போன்ற அந்தக் கால மெட்ராசின் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்கள் இதனை வடிவமைத்தனர். இதுதான் பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம் என்ற பெயரைத் தாங்கியபடி, இன்று மவுண்ட் ரோட்டை நோக்கி நின்று கொண்டிருக்கும் கட்டடம்.

முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த ஒட்டுமொத்த கட்டடமும் சிதிலமடைந்தது. எனவே இதில் வசிக்கும் அனைவரும் வெளியேறும்படி 1998ஆம் ஆண்டு எல்ஐசி கேட்டுக் கொண்டது. பின்னர் இந்த கட்டடத்தையும் இடிக்க முற்பட்டது. ஆனால் பாரம்பரிய விரும்பிகள், நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி முறையிட்டதால் கடைசி நேரத்தில் தப்பிப் பிழைத்தாலும், உயிர் இருந்தும் கோமா நிலையில் இருக்கும் நோயாளி போலத் தான் இன்று இருக்கிறது இந்த கட்டடம்.

மொத்தத்தில், ஒரு காலத்தில் மெட்ராஸ் நகருக்கு தனது கம்பீரத்தால் அழகு சேர்த்த கட்டடம், இன்று எப்போது இடிந்து விழும் எனத் தெரியாத அவல நிலையில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கிறது.

நன்றி - தினத்தந்தி

* முன்புறம் உள்ள பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம், ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தின் சாயலில் கட்டப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் பணிகளுக்காக இந்த பாரம்பரியக் கட்டடத்தின் சில பகுதிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment