என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, April 28, 2012

டவுட்டன் இல்லம்



வகுப்புகளில் உட்கார்ந்திருப்பதை சிறையில் இருப்பதைப் போல இருக்கிறது என்று சில மாணவர்கள் கமெண்ட் அடிப்பதை கேட்டிருப்போம். ஆனால், காலம் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறது. சென்னையில் சிலரை கைது செய்து வைக்கப் பயன்பட்ட ஒரு பழைய கட்டடத்தில் இன்று ஒரு கல்லூரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த கட்டடம்தான் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் டவுட்டன் இல்லம். அந்த கல்லூரி தான் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி.


அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கும் பல்லாயிரம் மைல் தொலைவில் தென்னிந்தியாவில் இருக்கும் இந்த கட்டடத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டுமே ஒரே காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரேவிதமான கட்டட அமைப்பில் கட்டப்பட்டவை. ஐரோப்பிய அதிகாரிகள் மெட்ராஸ் வரும்போது தங்குவதற்காக 1798இல் இந்த கட்டடம் கட்டப்பட்டது. முன் பகுதியில் பிரம்மாண்டமான தூண்களையும், பின்னால் பிறைநிலா வடிவிலான படிக்கட்டுகளையும் கொண்ட இந்த அழகிய கட்டடத்தை பெஞ்சமின் ரோபெக் (Benjamin Roebeck) என்ற புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் வடிவமைத்தார்.

அந்த காலத்தில் நுங்கம்பாக்கம் கிராமமாக இருந்தது. முன்புறம் பசுமையான நெல் வயல்கள், பின்புறம் தெள்ளத் தெளிவாக (அப்போது அப்படித்தான் இருந்தது) ஓடிக் கொண்டிருக்கும் கூவம் நதி என ரம்மியமான சூழலில் இந்த வீடு அமைந்திருந்தது. 1837ஆம் ஆண்டு வரை இது பெயரில்லாத கட்டடமாகத் தான் இருந்தது. பிறகுதான் இது டவுட்டன் இல்லம் என நாமகரணம் சூட்டிக் கொண்டது. காரணம், லெப்டினன்ட் ஜெனரலாக இருந்த ஜான் டவுட்டன் (Lt. General John Doveton) என்பவர் அப்போதுதான் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார். அவருக்கு பிறகு நிறைய ஆங்கிலேய அதிகாரிகள் இதில் தங்கினர். ஆனால் டவுட்டனின் பெயர் ஏனோ அப்படியே நிலைத்துவிட்டது.
இந்த டவுட்டன் என்ற பெயரில் ஏதோ ஈர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அது ஒரு பாரம்பரியமிக்க இந்து பிராமணக் குடும்பம் வரை பாய முடிந்தது. டவுட்டன் தனது இறுதிக் காலத்தில் இந்த வீட்டை தனக்கு நெருக்கமான ஒரு பிராமணக் குடும்பத்திற்கு உயில் எழுதி வைத்தார். அதில் இருந்து அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு பின்னால் டவுட்டன் என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டனர். டவுட்டனுக்கும் அந்த பிராமணக் குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பிற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

1792இல் மூன்றாவது மைசூர் போர் முடிவுக்கு வந்தபோது, ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி திப்பு சுல்தான் கிழக்கிந்திய படைக்கு ஒரு பெருந்தொகை தர வேண்டும் என முடிவானது. அதுவரை அவரது இரண்டு மகன்களை கார்ன்வாலிஸ் பிரபு பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தார். அந்த சிறுவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு டவுட்டனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. அந்த சிறுவர்கள் இந்த டவுட்டன் இல்லத்தில்தான் தங்க வைக்கப்பட்டனர் என்று ஒரு தகவல் சொல்கிறது. ஆனால் 1837இல் தான் டவுட்டன் இங்கு வந்ததால், இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது.


ஆனால் வேறு ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் இந்த இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் பரோடா இளவரசர் மல்ஹர் ராவ். அவரது ஊரில் இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியை கொல்ல முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் மெட்ராஸிற்கு அனுப்பப்பட்டு, 1875இல் இந்த இல்லத்தில் சில காலம் சிறை வைக்கப்பட்டார்.  

இந்த இல்லத்தில் கடைசியாக தங்கிய ஆங்கிலேயர் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி சர் ரால்ஃப் பென்சன் (Sir Ralph Benson). கூவத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்த இவர், வெள்ளியை உருக்கி ஊற்றியதைப் போல இருக்கிறது ("placid and silvery Cooum") இந்த நதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1913இல் அவர் மெட்ராஸில் இருந்து கிளம்பிய பின்னர், பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி இந்த வீட்டை விலைக்கு வாங்கியது. இந்தியப் பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் 1915ஆம் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, அடுத்த ஆண்டே புகழ்பெற்ற இந்த கட்டடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டது. 41 மாணவிகளுடனும், 7 ஆசிரியர்களுடனும் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில், இன்று சுமார் 3 ஆயிரம் மாணவிகள் பயில்கின்றனர்.

இந்த கல்லூரி வளாகத்திற்குள் இன்று நிறைய கட்டடங்கள் முளைத்துவிட்டன. இதில் கல்வி பயில வரும் இளம்பெண்களை, வயதான தாத்தா பேத்திகளை வாஞ்சையுடன் பார்ப்பதைப் போல பார்த்தபடி நின்றுகொண்டு நிற்கிறது, 200 ஆண்டுகளைக் கடந்த டவுட்டன் இல்லம்.


நன்றி - தினத்தந்தி


* 1914இல் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டம் ஒன்றும் இந்த கட்டடத்தில் நடந்திருக்கிறது.
* மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் மகளிர் கிறிஸ்துவக் கல்லூரிக்கு வருகை தந்துள்ளனர்.

No comments:

Post a Comment