என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, April 21, 2013

பேரி திம்மப்பா


பிற்காலத்தில் மிகப்பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுக்கும் பல விஷயங்கள் மிகச்சிறியதாகத் தான் தொடங்குகின்றன. அதற்கு தொடக்கப்புள்ளி வைப்பவர்களும் சாதாரண எளிய மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். மெட்ராஸ் என்ற மாநகரமும் அப்படி சில சாதாரண மனிதர்களால்தான் உருவானது. அவர்களில் முக்கியமான ஒருவர்தான் பேரி திம்மப்பா என்கிற பேரி திம்மண்ணா.

ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்தான் இந்த பேரி திம்மப்பா. கிழக்கிந்திய கம்பெனி தனது முதல் தொழிற்சாலையை மசூலிப்பட்டினத்தில்தான் அமைத்தது. ஆனால் அங்கு டச்சு மற்றும் போர்த்துகீசியர்களின் தொல்லை அதிகமானதால் கம்பெனிக்கு வேறு இடம்பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆண்ட்ரூ கோகன் தலைமையில் ஃபிரான்சிஸ் டே என்பவர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.

பேரி திம்மப்பா நன்றாக ஆங்கிலம் பேசும் திறனுடையவராக இருந்ததால், ஃபிரான்சிஸ் டே அவரை தமது துபாஷாக (மொழிபெயர்ப்பாளராக) பணியமர்த்திக் கொண்டார். ஆங்கிலம் மட்டுமே அறிந்திருந்த கிழக்கிந்திய கம்பெனிக்காரர்களுக்கு உள்ளூர் மன்னர்கள் மற்றும் பெரு வணிகர்களோடு வர்த்தகம் செய்ய மொழிபெயர்ப்பாளர்கள் அவசியமாக இருந்தனர். இதனால் அன்றைய காலத்தில் துபாஷிகள் பெரும் செல்வாக்குடன் வலம் வந்தனர்.

கம்பெனிக்காக இடம்தேடி அலைந்த ஃபிரான்சிஸ் டே, சாந்தோமிற்கு அருகே ஒரு பொட்டல் மணல்வெளியை தேர்ந்தெடுத்தார். அப்போது அங்கு சில மீனவ குப்பங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆண்ட்ரூ கோகனும் இந்த இடத்தை ஓ.கே செய்ய, நிலத்திற்கு சொந்தக்காரரான நாயக்க மன்னரின் உள்ளூர் நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பேரி திம்மப்பாதான் மொழிபெயர்ப்பாளராகவும், திறமையான தரகராகவும் செயல்பட்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்த நிலப்பரப்பை குறைந்த விலைக்கு பெற்றுத் தந்தார். இதற்கு பிரதிபலனாக ஆங்கிலேயர்கள் பேரி திம்மப்பாவிற்கு ஒரு பெரிய நிலப்பரப்பை அன்பளிப்பாக அளித்தனர்.

புதிய நிலப்பரப்பில் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் கோட்டை கட்டிக் கொள்ள, கோட்டைக்கு வெளியே தமக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் குடும்பத்தோடு குடியேறினார் பேரி திம்மப்பா. பின்னர் அவரின் குடும்பத்தினர் பல ஆண்டுகள் ஆங்கிலேயரின் தலைமை வணிகர்களாக விளங்கினர். இதனிடையே பேரி திம்மப்பா கோட்டைக்கு வெளியே ஒரு சிறிய நகரத்தையே உருவாக்கினார். நெல்லூர், மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து நெசவாளர்கள், சாயம் தோய்ப்போர் என நெசவுத் தொழிலோடு தொடர்புடைய பலரையும் அழைத்து வந்து குடியேற்றினார். இப்படி கோட்டைக்கு வெளியே உள்ளூர் மக்களால் உருவான நகரை ஆங்கிலேயர்கள் 'கருப்பர் நகரம்' என்று அழைத்தனர். அந்த கருப்பர் நகரத்தின் தந்தை பேரி திம்மப்பாதான்.

பேரி திம்மப்பாவின் அடியொற்றி ஆந்திர மண்ணில் இருந்து நிறைய பேர் இங்கு இடம்பெயர்ந்ததால்தான், அந்த காலத்தில் மெட்ராசில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது அப்படியே பல்கிப் பெருகி சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களைப் பிரிக்கும்போது, 'மதராஸ் மனதே' என்று தெலுங்குகாரர்கள் உரிமை கொண்டாடியதற்கு ஒரு வகையில் பேரி திம்மப்பாவும் காரணமாக கருதப்படுகிறார்.

உள்ளூர் மக்களுக்காக பேரி திம்மப்பா ஒரு பெரிய கோயிலையும் கட்டினார். தற்போது உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில் அந்த கோயில் இருந்தது. அதுதான் பட்டனம் பெருமாள் கோயில் என்று அழைக்கப்பட்ட சென்னக்கேசவப் பெருமாள் கோயில். பின்னர் பிரெஞ்சுப் படைகளுடனான போரின்போது இந்த கோயில் இடிக்கப்பட்டு, சற்று தள்ளி இப்போதைய பூக்கடை பகுதியில் மீண்டும் கட்டப்பட்டது தனிக்கதை.
சென்ன கேசவ பெருமாள் கோவில்

தாம் கட்டிய பெருமாள் கோயிலை பேரி திம்மப்பா, நாராயணப்ப அய்யர் என்பவருக்கு தானமாக அளித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி 1648இல் எழுதப்பட்ட ஒரு சாசனம் கிடைத்திருக்கிறது. அதில் 'நான் கட்டிய சென்னகேசவப் பெருமாள் கோயில், அதன் மானியம், அதனைச் சார்ந்த நிலங்களை, இதன் மூலம் உங்கள் பெயருக்கு மாற்றித் தருகிறேன். சூரிய, சந்திரர் உள்ள வரை உங்கள் வம்சாவளிக்கு அதன் போக உரிமை இருக்கும். அவர்கள் இந்த கோயிலில் எல்லா பூஜைகளையும் முறைப்படி செய்து வர வேண்டும். தவறினால், கங்கைக் கரையில் கரும்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள். இது நாராயணப்பையருக்கு பேரி திம்மண்ணாவால் கொடுக்கப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு
பேரி திம்மப்பாவிற்கு மகன்கள் யாரும் இல்லை, ஒரே ஒரு மகள்தான். அவரது வழியாக பேரியின் குடும்பம் வளர்ந்தது. பேரி திம்மப்பாவின் கொள்ளு கொள்ளுப் பேரர்களான திம்மப்பா பாஷ்யம் நாயுடு, நாராயணப்ப நாயுடு ஆகியோர் மெட்ராஸ் நகரின் மேம்பாட்டிற்க்காக நிறைய நிதி அளித்திருக்கின்றனர். அவர்களின் நினைவாகத்தான் கீழ்ப்பாக்கம் பகுதியில் பாஷ்யம் நாயுடு பூங்காவும், அப்பா கார்டன் தெருவும் இன்றும் இருக்கின்றன. இவர்கள் மட்டுமின்றி பேரி திம்மப்பாவின் குடும்பத்தில் வந்த பலரது பெயர்களும் சென்னையின் பல தெருக்களுக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மெட்ராஸ் என்ற மாநகரை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய பேரி திம்மப்பாவிற்கு, ஏனோ யாரும் ஒரு சிலை கூட வைக்கவில்லை.

நன்றி - தினத்தந்தி

* சென்னகேசவப் பெருமாள் கோவிலை நாகபட்டன் என்பவர் 1646இல் நாராயணப்பையருக்கு சாசனமாக அளித்தாகவும் ஒரு ஆவணம் கிடைத்திருக்கிறது. இந்த நாகபட்டன் என்பவர் ஆங்கிலேயர்களுக்கு வெடிமருந்துப் பொடி தயாரித்துக் கொடுப்பவராக இருந்தார்.

* பேரி திம்மப்பாவின் சகோதரரான பேரி சின்ன வெங்கடாத்ரி கிண்டியில் ஒரு பெரிய லாட்ஜ் வைத்திருந்தார். கிண்டி லாட்ஜ் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டடம் தான் தற்போது தமிழக ஆளுநர் வசிக்கும் ராஜ் பவன். 

No comments:

Post a Comment