என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Saturday, July 6, 2013

ஒய்.எம்.சி.ஏ

பிரபல விளையாட்டு மைதானங்களுக்கு நிகராக எப்போதும் பிசியாக இருக்கும் மைதானம் ஒன்று சென்னையில் உள்ளதென்றால் அது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானமாகத்தான் இருக்க முடியும். அரசியல் விழாக்களுக்கும், பொருட்காட்சி நிகழ்வுகளுக்கும் ஏற்ற இடமாகத் திகழும் இந்த மைதானத்திற்கு பின்னே ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.
ஒய்.எம்.சி.ஏ கட்டடம்

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ., டேவிட் (Mr.David McConaughy) என்பவரால் 1890ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் உதயமாகிவிட்டது. தொழிற்புரட்சிக்கு பிந்தைய இங்கிலாந்தில், துணி விற்பனை நிறுவனம் ஒன்றில் உதவியாளராக இருந்த 21 வயதான ஜார்ஜ் வில்லியம் என்பவரின் முயற்சியால் உருவானதுதான் இந்த இயக்கம். இவர் தன்னுடன் வேலை செய்யும் 12 ஊழியர்களை சேர்த்துக் கொண்டு 1844இல் லண்டனில் பைபிள் வகுப்புகளைத் தொடங்கினார். இளம் கிறிஸ்தவர்களிடையே நல்லொழுக்கங்களை போதிப்பதே இந்த வகுப்பின் நோக்கமாக இருந்தது. தற்போது 125க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் நாலரை கோடி உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஒய்.எம்.சி.ஏ (YMCA - Young Men’s Christian Association) இப்படிதான் கருவாகி உருவானது.

இந்தியாவில் ஒய்.எம்.சி.ஏ இயக்கம் 1857இல் கல்கத்தாவில்தான் காலூன்றியது. இதைத் தொடர்ந்து கொழும்பு, திருவனந்தபுரம், பம்பாய், மெட்ராஸ் என ஆசியாவின் பல பகுதிகளிலும் ஒய்.எம்.சி.ஏ ஆரம்பிக்கப்பட்டது. அந்த வரிசையில் 1890இல் மெட்ராஸ் வந்த டேவிட் என்ற இளம் அமெரிக்கர், இங்கு ஒய்.எம்.சி.ஏ இயக்கத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டு இவர் மேற்கொண்ட முயற்சியால் இந்தியாவில் உள்ள ஒய்.எம்.சி.ஏ அமைப்புகளின் கூட்டம் சென்னையில் கூடியது. ஒய்.எம்.சி.ஏ.வின் தேசிய கவுன்சிலை உருவாக்குவது என இதில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த கவுன்சிலின் தலைமையகம் முதல் ஓராண்டு காலம் மெட்ராசில் இருந்து செயல்பட்டது. பின்னர் இது கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது.

மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.விற்கென பாரிமுனையின் எஸ்பிளனேட் பகுதியில் 1895இல் ஒரு பிரம்மாண்ட கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கண்கவர் கட்டடத்தை ஹார்டிங் (G.S.T Harding) என்பவர் வடிவமைத்துக் கொடுத்தார். இதன் கட்டுமானப் பணிக்காக ஜான் வானாமேக்கர் என்பவர் அந்த காலத்திலேயே 40,000 டாலர் நன்கொடை அளித்தார். இந்த ஜான், அப்போது அமெரிக்காவின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக இருந்தார்.

பைபிள் வகுப்புகள், பிரசங்கங்கள் என கிறிஸ்தவ செயல்பாடுகளில் மட்டும் ஒய்.எம்.சி.ஏ கவனம் செலுத்தி வந்த நிலையில், 1919இல் மெட்ராஸ் வந்து சேர்ந்தார் ஹாரி க்ரோ பக் (Harry Crowe Buck). அடுத்த ஆண்டே எஸ்பிளனேட் கட்டடத்தில் இவர் ஒரு உடற்பயிற்சி பள்ளியை ஆரம்பித்தார். ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இந்த பள்ளியில் வெறும் 5 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். அந்த மாணவர்களுக்கு பக் அளித்த சிறப்பான பயிற்சிகளைப் பார்த்த மெட்ராஸ் அரசு, அவரை அரசின் உடற்கல்வி ஆலோசகராக 1922இல் நியமித்தது.

1924இல் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கச் சென்ற அணியில், ஒய்.எம்.சி.ஏ பள்ளியின் மாணவர்களும் இடம்பிடித்தனர். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில் பக் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். பள்ளி வேகமாக வளரத் தொடங்கியதால் எஸ்பிளனேட் இடம் போதுமானதாக இல்லை. எனவே 1928இல் ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளி மைதானத்திற்கு உடற்பயிற்சிக் கல்லூரி இடம்மாறியது. காலப்போக்கில் அந்த இடமும் போதுமானதாக இல்லாததால், அடையாறு ஆற்றங்கரையில் சைதாப்பேட்டையில் ஒரு பரந்து விரிந்த இடத்தை பக் தேர்வு செய்தார். இப்படித்தான் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி உருவானது.

65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்திலேயே பக்கும் குடும்பத்துடன் குடியேறி விட்டார். ஆரம்ப நாட்களில் வெறும் கீற்றுக் கொட்டகைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் 1933இல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் ஜார்ஜ் ஸ்டான்லி அடிக்கல் நாட்ட, கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கியது. காலப்போக்கில் இந்த உடற்பயிற்சிக் கல்லூரியில் பெண்களும் சேர ஆரம்பித்தனர். ஆசியாவின் பழமையான இந்த உடற்பயிற்சிக் கல்லூரியை வளர்ப்பதற்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த ஹாரி க்ரோ பக் 1943, ஜூலை 24 அன்று தனது கடைசி மூச்சு வரை இந்த வளாகத்தில்தான் இருந்தார். அவரது நினைவிடம் இன்றும் நந்தனம் வளாகத்தில் இருக்கிறது.

ஒய்.எம்.சி.ஏ.வைப் போலவே பெண்களுக்கென தொடங்கப்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ (YWCA - Young Women's Christian Association) ஆரம்ப நாட்களில் மெட்ராஸ் கிறிஸ்தவ மகளிர் அமைப்பு என அழைக்கப்பட்டது. இங்கு பெண்களுக்கான பைபிள் வகுப்புகள், தையல் பயிற்சிகள், தேநீர் விருந்துகள் நடைபெற்றன. இதே காலகட்டத்தில் மன்னரின் மகள்கள் (King's Daughters) என்ற அமைப்பும் மெட்ராசில் செயல்பட்டது. மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ.வைத் தொடங்கிய டேவிட்டின் மனைவி லில்லி இந்த அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் இந்த இரு அமைப்புகளும் 1892இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒய்.டபிள்யூ.சி.ஏ உருவானது.
ஒய்.டபிள்யூ.சி.ஏ

ஒய்.எம்.சி.ஏ, ஒய்.டபிள்யூ.சி.ஏ ஆகிய இரண்டும் கிறிஸ்தவ இளம்தலைமுறையினருக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், பின்னாட்களில் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் முத்திரை பதித்தன. மொத்தத்தில் மெட்ராஸ் வரலாற்றின் சில பயனுள்ள பக்கங்களை ஒய்.எம்.சி.ஏ தனது சேவையால் நிரப்பி இருக்கிறது என்பதே நிஜம்.

நன்றி - தினத்தந்தி

* மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த, முதன்முதலில் நடவடிக்கை எடுத்த கல்லூரிகளில் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரி மிக முக்கியமானது.

* பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள கிளைவ் இல்லத்தில்தான் ஒய்.டபிள்யூ.சி.ஏ தற்போது செயல்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment